மீண்டும் கடைசியாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தவெக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Governor of Tamil Nadu Tirunelveli Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 28, 2026 02:25 PM GMT
Report

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

கடைசி இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

மீண்டும் கடைசியாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தவெக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு | Tamil Thai Vazhthu Again In Last At Convocation

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாக மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்படும் என முன்னரே துணை வேந்தர் அறிவித்ததால், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ், திருநெல்வேலி தவெக எம்.எல்.ஏ முருகன் நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.

பெ.சண்முகம் கேள்வி

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,  இதில் தமிழ்நாடு அரசின் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், "தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் "என தெரிவித்துள்ளார். 

அமைச்சர் வன்னியரசு கண்டனம்

ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, "தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடியதன் மூலம் தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் ஆளுநர். 

மீண்டும் கடைசியாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தவெக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு | Tamil Thai Vazhthu Again In Last At Convocation

தமிழர், தமிழ்நாடு விரோத நடவடிக்கையில் மத்திய பாஜக அரசும், ஆளுநர் அர்லேகரும் ஈடுபடுகிறார்கள். சொல் அல்ல செயல் என்பதன் அடிப்படையில் தான் ஆளுநரின் விழாவை அமைச்சர், எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்திற்கே எதிரானது ஆகும். பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் தமிழக அரசின் கண்டிப்பை வெளிப்படுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.

யார் தடுத்தாலும் தமிழுக்கு முதலிடம்

இது குறித்து தவெகவின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். 

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.  அதற்குக் காரணமாக ஒன்றிய பாஜக அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். 

எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்" என தெரிவித்துள்ளது. 

கனிமொழி எதிர்ப்பு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. 

வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?" என தெரிவித்துள்ளார்.

தவெக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இதே போல் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்ட போது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனையடுத்து, இனி முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும் என உறுதியளித்த தமிழக அரசு, சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஆனால், இன்று தமிழ்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுடுத்த" என்ற பாடலை பாடிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திலே தமிழ்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டுள்ளது.

துணைவேந்தர் முன்னதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்படும் என தெரிவித்துள்ள போதும், அதனை முதலில் பாடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், விழாவை புறக்கணித்து வெறும் கண்டனம் மட்டும் தெரிவிப்பதா என சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.