கோலார் பேருந்து நிலையத்தில் தமிழ் பெயர்களை அழித்த வாட்டள் நாகராஜ் - கடும் எதிர்ப்பு

Kolar Vatal nagaraj
By Petchi Avudaiappan Jul 10, 2021 04:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கோலார் தங்க வயல் பேருந்து நிலையத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் பெயர்களை அழித்த வாட்டள் நாகராஜ் தமிழர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் தங்க வயல் பகுதியில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தங்க வயல் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு கன்னட கவிஞர் குவெம்புவின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் கன்னடம் மற்றும் தமிழில் பெயர் எழுதப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தனது ஆதரவாளர்களை கொண்டு பேருந்து நுழைவு வாயிலில் உள்ள தமிழ் பெயர்களை கருப்பு மை கொண்டு அழித்தார்.

இதனை கண்ட தமிழர்கள் வாட்டாள் நாகராஜுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தார் வைத்து தமிழ் எழுத்துக்களை அழித்த வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

கோலார் பேருந்து நிலையத்தில் தமிழ் பெயர்களை அழித்த வாட்டள் நாகராஜ் - கடும் எதிர்ப்பு | Tamil People Protest Against Vatal Nagaraj

மேலும் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டால் இனி வரும் காலங்களில் தமிழர்கள் வாக்களிப்பதை புறக்கணிப்போம் என்றும், அரசுக்கு செலுத்தும் நிதியை செலுத்த மாட்டோம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்படும் சூழல் நிலவவே உடனடியாக அங்கு வந்த போலீசார் தமிழர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாட்டாள் நாகராஜை கைது செய்தனர். 

பெரும்பான்மையாக தமிழர்கள் வாழக்கூடிய கோலார் மாவட்டத்தில் கன்னடர் தமிழர் என பாகுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட வாட்டாள் நாகராஜின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.