மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு : பா.ஜனதா மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீது 6 பிரிவுகளில் வழக்கு
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்பட 6 பிரிவுகளில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் நேற்று யு-டியூப்பர் மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது போலீசாருக்கும், பா ஜனதா தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் (143), போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் (353), குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளித்தல் (341), பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் (283), நோய் பரப்பும் வகையில் சுற்றித் திரிதல் (270) உள்பட 6 பிரிவுகளில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.