புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - தமிழக போலீசார் அதிரடி தடை
தமிழகத்தில் ஏற்கனவே புத்தாண்டை கடற்கரைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதிகளில் கடற்கரைக்கு வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தன. கடற்கரைக்கு செல்லாமல் மற்ற இடங்களுக்கு சென்று புத்தாண்டை கொண்டாட இளைஞர்களும் தயாராகி வந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். கடற்கரை பகுதிகள் தவிர பண்ணை வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள் எங்குமே புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதை கடுமையாக அமல்படுத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.
சென்னையில் வருகிற 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதிகளில் கடற்கரைக்கு வருவதை தடுக்க 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி கடற்கரைக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். வருகிற 30-ந் தேதி போலீஸ் கமிஷனர் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். அப்போது புத்தாண்டு கொண்டாட்ட தடை தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.