தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமனம்!
தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக சபாநாயகருக்கு துபாஷாக ராஜலட்சுமி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது அப்போது திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்தார்.
அதற்கு அடுத்த நாள் 19 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகருக்கு பெண்ணொருவர் துபாஷாக நியமிக்கப்பட்டுள்ளார். 1990ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தற்போது துபாஷ் பதவியை அடைந்துள்ளார் .
அவர் வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளார். துபாஷ் , சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வதும் , சபாநாயகர் பேரவையில் இருக்கும் போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பதும் ஆகும்.
மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். ஆங்கிலேலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இப்பதவியில் இதுவரை ஆண்களே இருந்து வந்த நிலையில், முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.