கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்!

Tamil nadu TVK
By Vinoja Jun 16, 2026 01:52 PM GMT
Report

தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் மாநிலத்தின் பொருளாதார நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் மரியா வில்சன் விரிவான விளக்கமளித்துள்ளார்.

கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! | Tamil Nadu White Paper Finance Minister Explan

பொருளாதார நிலை, வருவாய் மற்றும் செலவினங்கள், கடன் சுமை, வட்டி செலுத்தும் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் விரிவாக இடம்பெற்றிருந்தன.இந்த அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டார்.

மரியா வில்சன் விளக்கம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் நிதிநிலையை ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு விளக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை கணிசமாக உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கே செலவாகி வருவதாக தெரிவித்தார்.

கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! | Tamil Nadu White Paper Finance Minister Explan

நிதிநிலை மோசமாக இருப்பதாக அவர் கூறியதையடுத்து, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் நிறுத்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரியா வில்சன், நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். நலத்திட்டங்கள் என்பது தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியம்.

அந்த பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். இங்கு பிரச்சினை நலத்திட்டங்களில் இல்லை. அவற்றை நீண்ட காலத்திற்கு தாங்கிச் செல்ல தேவையான வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் விட்டதே முக்கிய பிரச்சினை.

வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்தாமல் புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்.

ஒரு குடும்பத்தின் வருவாய் குறைந்த பிறகும், தொடர்ந்து அதிக செலவுகளை மேற்கொள்வது போலவே இந்த நிலை உள்ளது.

அதேசமயம் செலுத்த வேண்டிய வரிகளை ஒத்திவைப்பதும், வீட்டின் பராமரிப்பைப் புறக்கணிப்பதும் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இவ்வாறான சிக்கல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால், அந்தக் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கிவிடும்,” என்றார்.

மேலும், மாநிலங்களின் நிதிநிலையை பொதுவாக எட்டு முக்கிய குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதாக அவர் தெரிவித்தார்.

அவை கடன் சுமை, நிதிப் பற்றாக்குறை, வருவாய் கணக்கு நிலை, சொந்த வரி வசூல் திறன், வட்டி செலவு, கட்டாய செலவுகள், மூலதன முதலீட்டு செலவுகள் மற்றும் அரசின் உத்தரவாதப் பொறுப்புகள் ஆகியவை ஆகும். குறித்த எட்டு குறியீடுகளின் அடிப்படையில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது.

இந்த மாநிலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பொருளாதார மற்றும் தொழில்துறை அடித்தளத்தைக் கொண்டவை. கொரோனா காலத்திற்குப் பிறகு ஒரே நிலைமையில் இருந்து மீட்சிப் பயணத்தைத் தொடங்கிய மாநிலங்கள் இவை.

ஒருவர் அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து கடைசி இடத்தில் முடித்தால், அதற்கான காரணம் வெளிப்புற சூழ்நிலைகளில் இல்லை. நாம் எடுத்த முடிவுகளில்தான் காரணம் இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது, என மரியா வில்சன் தெரிவித்தார்.