தமிழ்நாடு நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது - ராகுல் காந்தி
மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழக அரசு நாட்டிற் கே வளர்ச்சிப்பாதையை காட்டியுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையிவல், எங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பாஜக அப்படி நினைப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டும். ஆனால் அரசியல் சாசன சட்டம் சொல்வதை பாஜக ஏற்றுக்கொள்வதில்லை.
பாஜக டெல்லியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை ஆள வேண்டும் என நினைக்கிறது. மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் பாஜக தான் காரணம். அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்காற்றி உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் தற்போது அதிமுக கட்சி என்பது பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக மாறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழ்நாட்டை பினாமிகளை வைத்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறது. தமிழர்கள் ஒரு நாளும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் சரணடைய மாட்டார்கள் என்பது தெரியும்.
அதனால் அதிமுக மூலமாக தமிழ்நாட்டை ஆள நினைக்கிறார்கள். திராவிட சித்தாந்தத்தை பாஜக வெறுக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பாஜக தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வர முயற்சி செய்தது.
நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களுக்கு இருக்கும் பிரதிநிதித்துவத்தை கட்டுப்படுத்துவதே அவர்கள் நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.