அரியவகை மீன் சிக்கியதால் லட்சாதிபதியான மீனவர், ராமேஸ்வரத்தில் சுவாரஸ்யம்
அதிகமான விலையில் வாங்கப்படும் `லக்கி மீன்' என்று அழைக்கப்படும் கூரல் மீன்கள் பல தற்போது சிக்கி வருவதால் ராமேஸ்வரம் வட்டார மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடல் மீன்களில் மக்களால் அதிகம் விரும்பக் கூடிய வஞ்சரம் மீன், ஷீலா, வாவல், பாறை, ஊளா, வெள மீன், கொடுவா, சிங்கி இறால், புள்ளி இறால், நண்டு போன்றவைதான் அதிக விலைக்கு போகும்.
இவ்வகை மீன்கள் அதிகம் கிடைத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இதைவிட அதிக விலை போகக்கூடிய மீன்களும் அவ்வப்போது வலையில் சிக்கி மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
சமீபத்தில் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்களின் வலையில் பலவகையான மீன்கள் சிக்கின.
இதில், ஆன்ஸி என்ற மீனவரின் படகில் மட்டும் மற்ற மீன்களுடன் `லக்கி மீன்' என்ற சொல்லப்படும் கூரல் மீன்கள் 15 சிக்கின. இதை கத்தாழை மீன் என்றும் சில பகுதிகளில் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு கூரல் மீனின் எடை 5 முதல் 10 கிலோ வரை இருந்த நிலையில், இதை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டது.
கடைசியில் 15 மீன்களையும் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்தார். இத்தொகை அந்த படகுக்காரரருக்கு ஒரு நாளில் கிடைத்த லக்கி ப்ரைஸாக அமைந்தது.
அப்படியென்ன இந்த கூரல் மீன்கள் அபூர்வம் என்று பாம்பன் பகுதி மீனவர்களிடம் கேட்டோம்.
``மார்கழி மாதத்தில் மட்டும் குளிர் தேடி இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன கூரல் மீன்கள். மற்ற மீன்களைப்போல் இந்த மீனை நம் மக்கள் அதிகம் விரும்புவதில்லை.
இது முழுக்க முழுக்க சீனா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கு இதை பல்வேறு நோய்களுக்கான மருந்து தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இந்த மீனை யாரும் விலைக்கு வாங்கவில்லை. சமீப காலமாகத்தான் இதற்கு இவ்வளவு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒரு படகு உரிமையாளருக்கு இந்த மீன் சிக்கியதால் ஒரே நாளில் 45 லட்ச ரூபாய் கிடைத்தது. இந்த மீன் எல்லோரின் வலையிலும் சிக்குவதில்லை.
யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கோ அவர்களுக்கே சிக்குகிறது. இருந்தாலும் எல்லா மீனவர்களும் இந்த மாதத்தில் கூரல் மீன் சிக்க வேண்டுமென்றே கடலுக்கு செல்வார்கள்" என்றனர்.