மாணவி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் - தப்பியோடியவர்களை சுட்டு பிடித்த போலீஸ்
அண்மையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மாணவியை பலாத்காரம் செய்த போலி போலீஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் இரவு உணவு முடித்து எம்ஜிஆர் நகரில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது, போலீஸ் சீருடையில் வந்த இருவர், இரு சக்கர வாகனத்தில் தன்னைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர்.
அவர்களை போலீசார் என நம்பி, அவர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று போது வடமங்கலம் என்ற இடத்தில் தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்கு வந்து காவலன் செயலியில் புகார் அளித்தார் .
இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், குற்றவாளிகளைப் பிடிக்க ADSP சாந்தாராம், டிஎஸ்பி சுனில், காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலிய சீசர், மாவட்ட தனிப்படை என சுமார் 30 பேர் கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
20 வயது இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்த காமுகர்கள் இருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புக்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (வயது 31), பிரகாஷ் (31) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் 12.01.2023 அன்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.. இதைத்தொடர்ந்து, நாகராஜ் மற்றும் பிரகாஷை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஏற்கெனவே இருவர் மீதும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு, அரக்கோணம் காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் பெரியார் நகரிலும் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் காவலர்கள் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது.
முட்டிக்கு கீழ் சுட்ட நிஜ போலீஸ்
இதற்கிடையே, கைதான நாகராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர்களை விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது இருவரும் கீழ்கதிர்பூர் பகுதியில் போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்றதாகவும் தனிப்படை போலீஸார் நாகராஜின் வலது காலில் முழங்காலுக்கு கீழே ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய பிரகாஷ் கீழே தடுக்கி விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
பின்னர், அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.