மறுவரையறை மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு அச்சுறுத்தல் - ஜவாஹிருல்லா
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் இந்த சட்ட முன்வடிவு, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநிலங்களுக்கிடையேயான அரசியல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இதனால் பலவீனமடையும் அபாயம் இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பரிசளிக்க வேண்டிய நிலையில், அவற்றையே தண்டிக்கும் வகையில் இந்த முன்வடிவு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியப் பிரச்சினையல்ல; மாறாக, இந்திய அரசியல் அதிகாரப் பகிர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் செல்வாக்கு குறைகிறதா என்பதே கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைகள், கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநிலங்களின் சமமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளதாகக் கூறிய ஜவாஹிருல்லா, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், மக்களிடையிலும் வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
"தமிழ்நாட்டின் உரிமை என்பது எந்த ஒரு கட்சியினதும் அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு இன்று உருவாகியுள்ளது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.