அதிமுகவின் இன்றைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் – ஆதவ் அர்ஜுனா சாடல்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்றும், அதிமுகவின் தற்போதைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இன்று ஒட்டுமொத்த அதிமுகவும் இங்குதான் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர, வேறு யாரையும் அதிமுகவின் பொதுச்செயலாளராக அக்கட்சித் தொண்டர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற அதே இரவில், அதிமுக பொதுச்செயலாளர் நாங்கள் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். விஜய் தமிழக முதல்வராக வரக்கூடாது என்ற எண்ணம் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இருந்தது.
ஆனால், திமுகவுடன் இணைந்து யானைப் பேரத்தை நடத்தியது அதிமுகதான். அந்த அரசியலை தமிழக மக்கள் புறக்கணித்துவிட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி உள்ளிட்ட அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். அதிமுக மட்டுமல்ல, திமுகவில் உள்ள உண்மையான விசுவாசிகளையும் தவெக வரவேற்கிறது.
எங்களை நாடி வந்தவர்களை குடும்பத்தினரைப் போல நடத்துவோம்

எங்கள் தலைவர் விஜய், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் மதிப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். தமிழகம் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் மாநிலம். தவெகவில் இணைந்த அனைவரின் உணர்வுகளுக்கும் உரிய மதிப்பு அளிக்கப்படும்.
விஜய் மக்கள் இயக்கத்துடன் நீண்ட காலமாக பயணித்தவர்கள்தான் தற்போது மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். அவர்களும் புதியதாக இணைந்தவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தவெகவில் இணைந்த அனைவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்.
அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பதை வைத்தே நிலைமையை புரிந்துகொள்ளலாம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டதால்தான் தவெக வெற்றி பெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவினர் அளித்த ஆதரவும் தவெக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதிமுகவில் இருந்து பலர் தவெகவில் இணைவதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.
எனவே, எங்களை நாடி வந்தவர்களை குடும்ப உறுப்பினர்களைப் போல நடத்துவோம். அவர்களுக்கு தகுந்த பொறுப்புகளையும் பதவிகளையும் தலைவர் விஜய் வழங்குவார்" என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.