அண்ணாமலை பற்றிய கேள்விக்கு சிரித்தபடி பதில் சொன்ன கனிமொழி
சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு தான் என பதிலளித்துள்ளார் கனிமொழி கருணாநிதி எம்பி.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது ஆளும் கட்சியான திமுக.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி, மாவட்ட ரீதியாக மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.

நேற்று மதுரையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பகுதிவாரியான தேவைகள் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்படும்.
கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாத பல திட்டங்களையும் மாநில அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் கோரிக்கை வேறுபடுகிறது, ராமநாதபுரம் பகுதியில் மீனவர்களின் கோரிக்கைகளும், தஞ்சாவூர் பகுதியில் விவசாயிகளின் தேவைகளும் அதிகமாக உள்ளன, மதுரையில் தொழிற்சாலைகளை அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாகியதற்குத் தமிழக அரசே காரணம் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த கனிமொழி, மத்திய அரசு நிதி ஒதுக்காததே முக்கிய காரணம் எனவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 வருடங்களில் சிறுபான்மையினருக்கு திமுக அரசு என்ன செய்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதைக்கேட்டதும் சட்டென சிரித்த கனிமொழி, அவரே பாவம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சொல்லிவிட்டார், அப்புறம் ஏன், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு, பாஜக ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்தில் சிறுபான்மையினர் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என பதிலளித்தார்.