தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் அதில் ஒருத்தர் ஆளுநர் ரவி : தருமபுரம் ஆதீனம் பேச்சால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீக பயணம் மேற்கொண்டார். முன்னதாக திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அங்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து மன்னம்பந்தல் வழியாக தருமபுரம் ஆதீனத்தை வந்தடைந்தார்.
அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் தமிழக ஆளுநர் செல்லும் போது மீத்தேன் எதிர்ப்பு கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்தும், ஆளுநரை திரும்பச் செல்ல வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர். அப்போது ஆளுநர் பார்வைக்கு போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து மறைத்தனர்.
அப்போது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியையும், பதாகைகளையும் ஆளுநர் செல்லும் சாலையில் எரிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதன்பின் ஞானரத யாத்திரையை ஆளுநர் ஆர் என் ரவி தொடங்கி வைத்தார். தருமபுரத்தில் இருந்து தெலுங்கானா செல்லும் ஞானரத யாத்திரை, அங்கு நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்கவுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் இரு சூரியன்கள் இருக்கின்றன. ரவி என்றால் சூரியன் என்று பொருள், இது ஒரு தெய்வ செயல். எனவே, தமிழ்நாட்டின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆளுபவர்களின் சின்னமும் சூரியன் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.