தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ திட்டம் - இதில் உள்ள பலன்கள் என்னென்ன?
‘மக்கள் ஐடி’ என்று சொல்லக்கூடிய ஒரு அடையாள அட்டையை தமிழக அரசு அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதற்காக மக்கள் ஐடி
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்பொழுது தமிழக அரசு ‘மக்கள் ஐடி’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த அட்டை அரசுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமையும் என கூறப்படுகிறது. தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்ளை கொண்டுவரும் நிலையில் அந்த நலத் திட்டங்களால் மக்கள் பயனைடைகிறார்களா என்பதை கவனிக்கவும் மேலும் இத்திட்டங்களால் அவர்கள் எந்த விதத்தில் பயன் பெறுகின்றனர் என்பதை கண்காணிக்கவும் ‘மக்கள் ஐடி’ உதவும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ‘மக்கள் ஐடி’ தமிழ்நாடு மின் அமைப்பின் மூலம் உருவாக்க இருப்பதாகவும், இது 12 இலக்கங்களை கொண்டதாகவும், இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
யாருக்கெல்லாம் இந்த ஐடி
இதற்கான மென்பொருள் தயாரானவுடன் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் ஏற்கனவே அதிமுக ஆட்சியால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம். அவர்கள் அதை நிறவேற்றாமல் விட்டதால் தற்போது திமுக அரசு இதை செயல்படுத்த உள்ளது. மேலும் இந்த திட்டம் தமிழக அரசுக்கு மட்டுமே பயன்பெறும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.
குறிப்பாக வடமாநிலத்தவர்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் தமிழக அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் ஐடி உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மக்கள ஐடி திட்டத்தை தமிழ்நாடு மின் ஆளுமை அமைப்பின் மூலம் உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.