ட்ரெக்கிங் செல்பவரா நீங்கள்? தமிழக அரசின் மலையேற்ற திட்டம் - முன்பதிவு செய்வது எப்படி?
தமிழக அரசு மலையேற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மலையேற்ற திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை' இன்று (24.10.2024) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு இணையவழி முன்பதிவிற்காக பிரத்யோக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
மலையேற்ற வழிகாட்டிகள்
தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் (TNFD) கூட்டு முன்னெடுப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வன ஒழுக்கம். திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
காப்பீடு
தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை. வெந்நீர் குடுவை. மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள். விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்கள் நிலையான வருமானம் ஈட்டவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும்.
முன்பதிவு
மலையேற்ற திட்டத்திற்காக தமிழ்நாட்டில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் www.trektamilnadu.com என்ற வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை எளிதாக செய்ய உதவும் வகையில் புகைப்படம். காணொளிக்காட்சிகள், 3D அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
18 வயதிற்குட்பட்டவர்கள்
மேலும், இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்