மீண்டும் இருளில் மூழ்கும் தமிழகம் , அவதியில் பொதுமக்கள் , விழித்து கொள்ளுமா மாநில அரசு ?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டது, அந்த வகையில் நேற்று, கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அதேபோல் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குன்னத்தூர், சேவுர், களம்பூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கரூர், புலியூர், காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு அதன் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது.
அதேபோல் வந்தவாசி, செய்யாறு, போளூர், ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோணம், பார்வதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்சாரம் நிறுத்தப்பட்டது காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை,ஆயத்த ஆடைகளின் தொழில் நகரமான புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டது.
புத்தாநத்தம் பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவுவதாகவும் இதனால் ஆயத்த ஆடை தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை ,திமுக ஆட்சியில் இருந்த போது தொடர் 9 மணி நேர மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்,
இந்த நிலையில் தற்போது மீண்டும் மின்வெட்டு தொடங்கியுள்ளது ஆளும் கட்சியான திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திடீர் மின் வெட்டு குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் :
இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 20, 2022
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க
நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் (1/2)
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின.
இனிவரும் காலங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.