தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 6-ம் தேதி வரை மழை பெய்யகூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன்,
“தெற்கு வங்ககடல் பகுதியின் மத்தியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
இதன் காரணமாக வருகிற 3-ம் தேதி கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், டெல்டா மாவட்டங்கள், புதுகோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
5-ந் தேதி கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள்,கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர்,பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்கலில் கனமழையும் பெய்யக்கூடும்.
6-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் தென்மேற்கு வங்ககடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, மன்னார்வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 3, 4, 5-ன் தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்” என தெரிவித்தார்.