நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு..!
நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டிற்கு 6 கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். ஜனவரி 26,மே 1,ஆகஸ்ட் 15,அக்டோபர் 2,மார்ச் 22 தண்ணீர் தினம்,நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்கும் அமர்வுப்படி தொகை 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் இதன் மூலம் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர் என்றார்.
கலைஞர் ஆட்சியில் தான் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி வழங்கப்பட்டது. உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருது இந்த ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்.
ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் 37 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு வாகனம் வழங்கப்படும்.