தமிழக பட்ஜெட் 2021 - 2022 எப்போது தெரியுமா?
வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
கடந்த அதிமுக அரசு பிப்ரவரி மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இந்த ஆண்டு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது அவசிய கடந்த மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையின் 16 வது கூட்டத் தொடரை நடத்தியது.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான நன்றி மற்றும் விவாதம் நடைபெற்று ஜூன் மாதம் 24ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.அத்துடன் தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், வேளாண்மைக்கு முதல் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், பட்ஜெட் தாக்கல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் முடிவில், ஆக.,13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபை செயலர் சீனிவாசன் கூறுகையில், வரும் ஆக.,13ம் தேதி தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என கூறினார்.