நான் தமிழ்நாட்டோட கடனை அடைக்கிறேன் .. .69 லட்சத்திற்கு செக் எடுத்து வந்த நபரால் பரபரப்பு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.60 லட்சம் கடன் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் தனது பங்கான ரூ.2.60 லட்சத்தினை காசோலையாக வழங்க வந்த நபரால் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்றை தினம் சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தின் கடனை அடைக்க நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனருமான ரமேஷ் தியாகராஜன் தனது குடும்பத்திற்கான பங்கினை 2,69,976 ரூபாய்க்கான தொகையை காசோலை வாயிலாக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து வழங்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.
அப்போது ஆட்சியர் இல்லாததால் ஒரு மணி நேர காத்திருந்த ரமேஷ் காசோலையை வழங்காமல் திரும்பி சென்றார். தமிழக நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி தனது கடன் பங்கான ரூ.2.69 லட்சத்தினை செலுத்த வந்த நபரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷ் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது தனது குடும்பத்திற்கான கடன் தொகையை காசோலையாக வழங்க உள்ளதாகவும், மேலும் இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு 15 லட்சம் குடும்ப கடனாக வழங்கி குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்கவும் தனி நபருடைய வருமானத்தை பெருக்கி வறுமையையும், ஏழ்மையையும், போக்குவதற்கு கோரிக்கையையும் முன் வைத்து இந்த தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.