கட்சி விட்டு கட்சி மாறும் ஜி.கே.வாசன்... நிலைநாட்டுவாரா தந்தையின் கொள்கையை?
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 1996 முதல் தமிழகத்தில் ஜி.கே.மூப்பனாரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி. 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார்.
தமாகா - ஓர் பார்வை
ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். அதனையடுத்து ஜி. கே. மூப்பனார் தனது தலைமையில் எதிர்ப்பாளர்களை அணி திரட்டி ”தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
கட்சித் தொடங்கிய உடனே தேர்தலைச் சந்தித்த த.மா.க., 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. அத்தோடு சட்டமன்ற தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 இடங்களில் வென்றது.
திமுக - தமாகா
இந்த வெற்றிக்கு, திமுக - தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த குரலும் பக்க பலமாக இருந்தது. 1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் சார்பில் ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர்.
பின்னர்,1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. பின்னர் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளால் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை விட்டு வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி,
சட்டமன்றத் தேர்தல்
தமிழக அரசியலில் வளர்ந்து வந்த இயக்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் , புதிய தமிழகம் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்தத் தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை.
தொடர்ந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களைப் பிடித்தது. இந்நிலையில், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூப்பனார் மறைந்தார். பின்னர் அவரின் மகன் ஜி. கே. வாசன் த.மா.க. வின் தலைவரானார்.
மறுதொடக்கம்
ஜி.கே வாசனின் தலைமைக்குப் பிறகு டெல்லி தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டால், 2002 ஆம் ஆண்டில் த.மா.க. இந்திய தேசியக் காங்கிரசுடன் ஐக்கியமாகி விட்டது. 2002 ஆண்டில் காங்கிரஸ் உடன் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து.
அத்தேர்தலில் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் ஜி. கே. வாசன் தனது தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மறுதொடக்கம் செய்தார்.
45 லட்ச உறுப்பினர்கள்
தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதன்படி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் மூத்த துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக என்.எஸ்.சி.விசித்தனும், தேர்தல் உயர்மட்டக் குழு தலைவராக பாரமலையும், தேர்தல் முறையீட்டுக்குழு தலைவராக வேலுவும் நியமிக்கப்பட்டனர். மேலும், சி.ஞானசேகரன், கோவை தங்கம் உள்பட 9 பேர் துணைத் தலைவர்களாகவும், ராம்பாபு, விஸ்வநாதன் உள்ளிட்ட 20 பொதுச்செயலாளர்கள், 32 செயலாளர்களின் பெயர்களையும் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து இதுவரை 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் ஜி.கே.வாசன் அறிவித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் தமாகா தலைவர் ஜி. கே. வாசன் அதிமுகவில் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது போட்டியிடும் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையால் அக்கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து.
சறுக்கல்
பின்பு வைகோ தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரசு இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு ஆதரவு கொடுத்த ஜி. கே. வாசன் இத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து தமாகாவும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிமுக-பாஜகவின் தலைமையிலான கூட்டணியில் தமாகா இடம் பெற்றிருந்தது. தஞ்சாவூர் தொகுதியில் மக்களவை உறுப்பினர் ஆக தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இம்முறை அதிமுக-பாஜக கூட்டணியில் மோடி அமைச்சரவையில் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து கௌரவபடுத்தியது.
2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் மீண்டும் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன்,
எதிர்கட்சியான திமுகவையும் அக்கட்சியின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த எதிரணி கட்சிகளை பலமாக விமர்சித்து எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகாவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிமுகவின் அதிகார பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
ஜி.கே.வாசன்
ஜி. கே. வாசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். தமிழக காங்கிரஸ்தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,
இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.
ப.சிதம்பரம்
இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சராவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தார்.
ஆனால் காங்கிரசின் தமிழ்நாட்டு உறுப்பினர்களும் தலைவர்களில் பெரும்பாலானோரும் இதனை எதிர்த்தனர். அவர்கள் கோ. கருப்பையா மூப்பனார் தலைமையில் பிரிந்துசென்று தமிழ் மாநில காங்கிரசு என்ற புதியகட்சியை 1996 மார்ச் 29ஆம் நாள் தொடங்கினர்.
அக்கட்சியின் நிறுவுநர்களில் ஒருவராகப் ப.சிதம்பரம் விளங்கினார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரசு சனநாயகப் பேரவையின் சார்பில் இந்திய தேசிய காங்கிரசின் சின்னத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அமைச்சரானார் ப. சிதம்பரம்.
பி.எஸ்.ஞானதேசிகன்
இவர் இந்தியத் தேசியக் காங்கிரசின் சார்பில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினாக இருந்தவர் ஆவார். கே.வி. தங்கபாலுவிற்கு அடுத்ததாக தமிழ்நாடு மாநில காங்கிரசுக் குழுவின் தலைவராக இருந்தவர் ஆவார்.
காங்கிரசில் இருந்து ஜி. கே. வாசன் பிரிந்து தமிழ் மாநில காங்கிரசு கட்சியை மீண்டும் தோற்றிவித்தபோது இவரும் அவருடன் சேர்ந்து காங்கரசிலிருந்து சென்றார். தமிழ் மாநில காங்கிரசின் துணைத் தலைவராக இருந்தார்.
எஸ். பீட்டர் அல்போன்ஸ்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.காங்கிரஸில் இருந்து ஜி. கே. மூப்பனார் பிரிந்தபோது அவரது தமிழ் மாநில காங்கிரஸில் பீட்டர் அல்போன்ஸ் இணைந்து பணியாற்றினார்.
அப்போது மூப்பனாரின் வலதுகரமாக செயல்பட்டவர். மூப்பனாரின் இறப்புக்குப்பின் அவரது மகன் ஜி.கே. வாசனுடன் இணைந்து பணியாற்றினார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் ஜி.கே.வாசன் உறுதியான முடிவை எடுக்கத் தவறியதால் பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டார்.
கோவை தங்கம்
தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 2001 மற்றும் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வால்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ல் திமுகவில் இணைந்தார்.
கே.வி. தங்கபாலு
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார். கே.வீ.தங்கபாலு அவர்கள் சேலத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவராக திகழ்கிறார்.
ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, 2004 மக்களவைத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, (214477) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
தந்தையின் கொள்கை
"வளமான தமிழகம்; வலிமையான பாரதம் என்பதுதான் எங்களின் லட்சியம்’’ என்று வாசன் அடிக்கடி கூறுவார். அந்த வலிமையான பாரதத்தைக் கட்டமைக்கத்தான் இப்படி கட்சிமாறி மாறி கூட்டணி வைக்கிறாரா? தந்தை தொடங்கியக் கட்சியைக் கலைத்து, காங்கிரஸுடன் இணைந்தார்.
மீண்டும் காங்கிரஸிலிருந்து விலகி அதே கட்சியை அதே பெயரில் மீண்டும் தொடங்கினார். தொடர்ந்து தாய்க் கழகத்துக்கும் தந்தையின் கொள்கைக்கும் எதிரான பி.ஜே.பி கூட்டணியில் வாசன் கட்சி இடம்பிடித்ததும் இந்திய நலனுக்காகத்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.