இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் - ஏ.ஆர்.ரஹ்மான்!

India France Tamil Issue Hindi A. R. Rahman ஏ.ஆர்.ரஹ்மான் Lingua
By Thahir Apr 11, 2022 03:02 AM GMT
Report

இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் எனவும் இந்தி இல்லை எனவும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும்.

இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்; இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழி" என பேசியிருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு , 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரியை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகான் விருதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

விழா முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என அவர் பதிலளித்தார்.