தமிழக வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லையா? - IBPS அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

Tamil nadu
By Petchi Avudaiappan May 14, 2022 07:34 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற  வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழ்நாட்டில் சமீப காலமாக தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால் வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு அவர்கள் கைகாட்டி விடுவதும் வாடிக்கையாகியுள்ளது.

தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியை கற்றுக்கொள்ள 3 மாத அவகாசம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே தான் செல்கிறது. 

இதனிடையே வங்கிகளில் கிளர்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களில் சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அகில இந்திய ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி, ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 விழுக்காடு வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அது  50 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் 2022-23ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 விழுக்காடுக்கு மேல், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளதாகவும் ஜி.கருணாநிதி தெரிவித்துள்ளார்.