'தமிழில்ல' அடிக்கல் நாட்டு விழா- மாவீர நினைவாலய அடிக்கற்களாலும், முள்ளிவாய்க்கால் புனித மண்ணாலும் இடப்பட்ட அத்திவாரம்
பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் தமிழில்ல கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இன்று (25.08.2021) நடைபெற்றது.
பண்பாட்டு அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவீர நினைவாலய நுழைவாயில் மற்றும் வணக்க தளங்களிலிருந்து காவி வரப்பட்ட அடிக்கற்களும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித மண்ணும் கட்டிடத்திற்கான அத்திவார பகுதியில் வைக்கப்பட்டது.
பொதுச்சுடர் ஈகைச்சுடர் தேசியக்கொடி ஏற்றல் அக வணக்கங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், தேச விடுதலையை நேசிக்கும் மக்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என்ன பலநூறு பேர் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்காலில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித மண்ணினை மாவீரர்களின் துணைவியர் இருவர் அத்திவார பகுதியில் தூவினர். அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலை வரலாற்றின் முதல் மாவீரர் லெப்.சங்கர் அவர்களுடைய தந்தை திரு. செல்வ சந்திரன் அவர்களும், மூன்று மாவீரர்களின் பெற்றோர் திரு .சண்முகசுந்தரம் திருமதி இராத்தினேஸ்வரி அம்மா ஆகியோரும், ஈகைப்பேரொளி முருகதாஸ் அவர்களுடைய தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்களும், வரலாற்று மையத்தின் அறங்காவலர் திரு. சுகந்தகுமார் அவர்களும் வரலாற்று மைய மேலாண்மை பணிப்பாளர் திரு. சத்தியரூபன் அவர்களும் வைத்தனர்.
தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரது கைகளிலும் அடிக்கல் வழங்கப்பட்டது அந்தக் கற்களில் தமது மனம் நிறைந்த மாவீரர்களின் பெயர்களையும் வாழ்த்துச் செய்திகளையும் எழுதி அத்திவார பகுதியில் நடுகை செய்தனர்.
வருகை தந்திருந்த பிரித்தானியாவின் அரசியல் பிரமுகர்களுக்கும் எமது மக்களுக்குமான கருத்துக்கள் உரைகளாக வழங்கப்பட்டது.
தாயகத்திலிருந்து மாவீரரின் மகள் தனது உணர்வுகளை ஒலி வடிவமாக பகிர்ந்து கொண்டார். பல்வேறு தேச உணர்வாளர்களின் வாழ்த்து செய்திகளுடன் இந்நிகழ்வு மிகப்பெரிய மன உறுதியுடன் நிறைவடைந்தது.