தியேட்டர்களில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது: அரவிந்த் சாமி கருத்து
கொரோனா பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக மூடப்பட்ட திரையரங்குகளைத் நவம்பா் 10-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்து, அதற்கான வரைமுறைகளையும் வெளியிட்டது.
அதில் மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. அரசின் அனுமதியைத் தொடா்ந்து, தமிழகத்தில் படிப்படியாகத் திறக்கப்பட்டன. ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைவாகவே இருந்தன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்த நிலையில் விஜய் நடித்த 'மாஸ்டா்', சிம்புவின் 'ஈஸ்வரன்' போன்ற திரைப்படங்கள், பொங்கல் பண்டிகை வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளா்கள், நடிகா்கள் உள்ளிட்ட திரைத் துறையினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்த கோரிக்கைகளை ஏற்று இருக்கை அளவை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்தி தமிழக அரசு அனுமதியளித்தது. சினிமா துறையினர் இதற்கு வரவேற்பு தெரிவித்தாலும் இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தற்போது நடிகர் அரவிந்த் சாமியும் 50% இருக்கைகளை வைத்து இயக்குவதே சரியானது என்று தெரிவித்துள்ளார்
There are times when 50% is way better than a 100%. This is one of them.
— arvind swami (@thearvindswami) January 4, 2021