சிக்கலில் சிக்கிய சென்னை அணி... போர்க்கொடி தூக்கிய தமிழ் அமைப்புகள் : ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

csk ipl2022 BoycottChennaiSuperKings
By Petchi Avudaiappan Feb 14, 2022 11:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. இதில் சென்னை அணி 87.5 கோடி ரூபாய் செலவு செய்து 25 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளது. 

இதில் நட்சத்திர வீரர்கள் ரெய்னா, டுபிளஸியை எடுக்கவில்லை என்பதால் அந்த அணி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே சமூக வலைத்தளமான ட்விட்டரில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. இதனை ரெய்னா, டுபிளஸி செய்கிறார்கள் என நினைக்கப்பட்ட நிலையில் இதன் பின்னால்  தமிழ் அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது மகீஷ் தீக்சணா என்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளரை ஏலத்தில் சென்னை அணி தேர்வு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை நாட்டை சேர்ந்த வீரருக்கு ஏன் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று கூறி தமிழ் அமைப்புகள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தீக்சனாவை அணியிலிருந்து நீக்கவில்லை என்றால் சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் தமிழகத்தில் போட்டியை நடத்த விட மாட்டோம் என்ற தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ் அமைப்புகளின் இந்த எச்சரிக்கையால் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை வீரர்களை தேர்வு செய்யாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.