‘’எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'’ - இனி போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் : அதிரடி காட்டும் தமிழக அரசு

tamil exam MKStalin TNPSC
By Irumporai Dec 03, 2021 07:21 AM GMT
Report

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டி தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் I, II, II-ஏ ஆகிய இரு நிலைகளை கொண்ட தேர்வுகளை தமிழ் மொழித் தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடத்தப்படும்.

குரூப் III, IV ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கில தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும்.

கடந்த ஆட்சியில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

தமிழ் தெரியாதவர்கள் இனி தமிழ்நாட்டில் அரசுப்பணியில் சேர்வதை தடுக்க கட்டாய தமிழ் தேர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி சார்பில் இனி நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும்.

தமிழ் கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்தி, மனித வள மேலாண்மைத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர், மருத்துவ பணியாளர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரை அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நிதித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.