உடல் முழுவதும் தீக்காயம் - 5 வயது தம்பியை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா
தாம்பரம் அருகே 5 வயது சிறுவனை தொடர்ந்து 4 மாதங்களாக அடித்து துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்த அக்காவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அருகா காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் கூலி வேலை செய்து வருகிறார். இவர், மனைவி சூசை மேரி, மூன்று மகள், ஒரு மகன் என குடும்பமாக வசித்து வருகிறார்.
இவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் மனைவி சூசை மேரியும் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இதனால் குழந்தைகளை கவனித்து கொள்ள ஆட்கள் இல்லை என்று எண்ணி அதே பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் நான்கு மாதத்திற்கு ஆபேல் என்கிற 5 வயது மகனை அனுப்பியுள்ளார்.
அங்கு சூசை மேரியின் சகோதரி மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததால் அவரது மகள், மேரி ஆபேலை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலில் தீக்காயம், அடித்த காயம் இருப்பதை கண்டு அவரை கவனித்துவந்த அக்கா மேரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் துடுக்குதனமாக இருந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை நான்கு மாதங்களாக அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.