ஸ்டேஷன்ல போலீஸ்ன்னு ஒருத்தர் கூட இருக்க மாட்டிங்க - வாக்கி டாக்கி மூலம் கதற விட்ட காவல் ஆணையர்
தாம்பரம் காவல் ஆணையர் ரவி புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்கும் போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல் ஆணையரகம் இரண்டாக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றி வருகிறார். தாம்பரம் சரகத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் மனைவியைக் கணவன் தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் மீது போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட அப்பெண் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் 4 முறை புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி நடவடிக்கை எடுக்காத போலீசாரை வாக்கி டாக்கி மூலம் கடுமையாக எச்சரித்தார். அவர் வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 முறை புகார் கொடுக்க அந்த பெண் வந்து செல்கிறார். பள்ளிக்கரணை போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றி விடுவேன்.
தனுஷ்கோடியில் போய் அலையை எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளி விடுவேன். சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கக் கூடாது. வெட்டித்தனமாக வேற வேலையை ஏதாவது பார்த்திட்டு இருந்தீங்கனா அவ்வளவு தான். கூண்டோடு காலி பண்ணிவிடுவேன்.
பெண் ஒருவர் புகார் கொடுக்க 4 முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க. போலீஸ் எதற்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள் தானே. பொதுமக்களை துன்புறுத்தத்தான் இருக்கிறீர்களா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார்.
மேலும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சைபர் கிரைம் தொடர்பாகப் புகார்கள் வந்தால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகாரைப் பெற்று சிஎஸ்ஆர் கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். சைபர் கிரைம் புகார்களைத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கக்கூடாது. புகார் கொடுக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது. குறையோடு புகார் கொடுக்க வருபவர்களை உட்கார வைத்து புகாரைப் பெற்று அனுப்பி விடுங்கள். சரியாக பணியைச் செய்யுங்கள் எனவும் காவல் ஆணையர் ரவி அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.