முதல்வரின் துறையில் டெண்டர் முறைகேடு - மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை
tambaram corporation commissioner to waiting list for tender scam: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு புகாரில் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
— Arappor Iyakkam (@Arappor) September 15, 2026
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… pic.twitter.com/YxxeSJnoZt
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.

மேலும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை, ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது.
இன்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா ஐஏஎஸ், கூடுதலாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் என அறிவித்துள்ளது.