இந்திய அணிக்கு பாண்ட்யா தேவையில்லை - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்க வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 2018 ஆம் ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக செய்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பந்துவீசாமல் முழுநேர பேட்ஸ்மேனாக அணியில் இருந்து வருகிறார்.

மேலும் டி20 உலகக்கோப்பையில் தான் பந்து வீசுவதாக உறுதியளித்து வாய்ப்பினையும் பெற்றார். அதேசமயம் தற்போது உலகக்கோப்பை தொடருக்கு முன்பான 2 பயிற்சி ஆட்டங்களிலும் பாண்ட்யா பந்து வீசவில்லை. இதன் காரணமாக அவர் மீது நாளுக்கு நாள் விவாதம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசாமல் நீடிப்பது கடினம். எனவே அவருக்கு பதிலாக உலகக்கோப்பை போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாட வைப்பது சிறப்பான ஒரு முடிவாக அமையும் . ஏனெனில் பந்துவீச்சில் தரமாக செயல்படும் ஷர்துல் தாகூர் பேட்டிங்கிலும் நிச்சயம் கை கொடுக்கக் கூடியவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். 

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமெனில் கேப்டன் கோலி ஷர்துல் தாகூர் மீது நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும். அவர் பென் ஸ்டோக்ஸ் போன்று ஒரு மேட்ச் வின்னர் எனவும் பனேசர் கூறியுள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்