“இவரே ஒரு பொம்மை ... வந்துட்டாரு பேச” - இம்ரான்கானை விளாசும் தாலிபான்கள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தாலிபான்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். அங்கு பிரதமர், துணை பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், துணை வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் புதிய அரசில் பெண்களுக்கு பிரநிதித்துவம் கொடுக்கவில்லை என்பதால் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே சில தினங்களுக்கு முன், பொம்மை அரசாங்கத்தை வைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த தாலிபான்கள் இம்ரான் கானின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
தாலிபான் செய்தி தொடர்பாளர் நயா தவுர், ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கிடையாது, அவரே ஒரு பொம்மை தான். எங்கள் விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம், அது போல நாங்களும் யார் விவகாரத்திலும் தலையிட மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தானே பெரும் பிரச்னையில் தான் உள்ளது. ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கிடையாது. பாகிஸ்தான் தேசத்தின் ஒப்புதல் இல்லாமலே அவர் பதவிக்கு வந்துள்ளார் என நயா தவுர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.