ஆப்கான் அதிபர் தற்போது எங்கு ஒளிந்திருக்கிறார் தெரியுமா?
தாலிபான்கள் ஆதிக்கத்தால் நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். அண்மையில் தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்தனர்.
இதை அறிந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன், சிறப்பு விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியது.
பணம் நிரப்பப்பட்ட நான்கு கார்கள் மற்றும் ஹெலிகாப்டருடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி, மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த விளக்கமளித்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அதிகாரிகள், மனிதாபமான அடிப்படையில், அஷ்ரப் கனிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.