காபூலை நெருங்கும் தலிபான்கள்: நாட்டை விட்டு வெளியேறுகிறாரா அதிபர் அஷ்ரப் கானி?
ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்கள் தலைநகர் காபூல் அருகிலுள்ள மாகாணத்தை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் இன்னும் 3 வாரங்களில் முழுமையும் நாடு திரும்ப உள்ளன.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை வசப்படுத்த தலிபான்கள் அமெரிக்க ஆதரவு அரசுப் படையினருடன் ஆக்ரோஷமாக போரிட்டு 10க்கும் அதிகமான மாகாணங்களை கைப்பற்றிவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் காபூலின் தெற்குப் பகுதியில் உள்ள லோகர் என்ற மாகாணத்தை தலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தாலிபன்களை அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அழைத்தது. இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தாலிபன்கள் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலாவதாக, ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள அனைத்து தாலிபன் தீவிரவாதிகளையும் விடுவிக்கவேண்டும் எனவும், இரண்டாவதாக ஐநாவின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கவேண்டும் எனவும் தாலிபன்கள் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மூன்றாவதாக நாட்டின் அதிபர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்நாட்டு அமைச்சர் ஆகிய பதவிகளையும், இராணுவ தளபதி, ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை தலைவர் ஆகிய பதவிகளையும் தங்களுக்கு வழங்கவேண்டுமென தாலிபன்கள் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி பதவியை விட்டு விலகி, குடும்பத்தினரோடு மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில்அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் அஷ்ரஃப் கனி, ஆட்சியை தக்கவைக்க தீவிர முயற்சி செய்துவருவதாகவும், இதன் முடிவு சில நாட்களில் தெரியும் என கூறியுள்ளார்
மேலும் ஆப்கன் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் விழுவதை அனுமதிக்க மாட்டேன் என உறுதியளிப்பதாக அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது