தாலிபான்களின் புதிய அரசு - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
ஆப்கானிஸ்தானின் புதிய அரசு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதை தொடர்ந்து அங்கு 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தாலிபான்கள் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது முந்தைய தாலிபான் அரசுப் போல் இருக்காது என்றும், நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஈரான் மாடலில் தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அமைய வாய்ப்புள்ளது.
அதாவது பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர் செயல்படுவார். இந்தப் பதவியில் தங்கள் இயக்கத்தின் உச்ச அதிகாரம் பெற்ற முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வை நியமிக்க தாலிபான்கள் முடிவுசெய்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மதிய தொழுகைக்கு பின்னர் புதிய அரசு குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.