காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள்: அதிகரிக்கும் பதற்றம்- அதிபர் பதவி விலகல்?
ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் தலிபான்களின் படை நுழைந்துள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறத்தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்தனர்.
இன்று காலை ஜலலாபாத் நகரத்தை கைப்பற்றினர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் தலிபான் அமைப்பிற்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் எந்தவித வன்முறை நடவடிக்கை இன்றி அமைதியான பேச்சு வார்த்தை முறையில் ஆட்சி மாற்றம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தலிபான்கள் அமைப்பின் கீழ் ஆப்கானிஸ்தான் அரசு இயங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.