பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் – கோரமுகத்தை காட்டும் தலிபான்கள்
தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதன் பின்னணியில் பாகிஸ்தானின் தலையீடு இருக்கிறது. பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆப்கானிஸ்தான் அரசு பற்றிய பேச்சுக்களே அதற்குச் சாட்சி.
இதை விட தலிபான்கள் காபூலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உடனே, அடிமை சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானை தலிபான்கள் உடைத்தெறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

இதிலிருந்தே பாகிஸ்தானின் ஏகோபித்த ஆதரவு தலிபான்களுக்கு இருப்பதை எளிதில் யுகிக்க முடியும். தலிபான்களும் பாகிஸ்தான் தங்களின் இரண்டாவது வீடு என்கிறார்கள். இரு நாடுகளும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் அண்ணன், தம்பிகளைப் போல.
அது ஒன்றை அவர்களை இணைக்கிறது. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானில் பொம்மை அரசை நிறுவி அதைத் தாங்கள் ஆட்டுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.
இது இன்று அல்ல. பெனாசிர் பூட்டோ பிரதமராக இருந்த காலத்திலிருந்தே தொடங்கியது தான். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு பெரும்பாலான தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்தே இயங்கினர்.
இது மட்டுமின்றி நிதியுதவி, ஆயுதங்கள் சப்ளே என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தது பாகிஸ்தான் தான். சீனாவின் தலையீடும் உண்டு. அமெரிக்க படைகளை பாகிஸ்தான் தலிபான்கள் உதவியுடன் வீழ்த்தியிருக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. தலிபான்கள் ஆட்சியில் இடைக்கால பிரதமராகியிருக்கும் முல்லா ஹசன் அகுந்த் கூட பாகிஸ்தானிலிருந்து தான் இயங்கினார்.
அவருக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தப் புள்ளிகளை இணைத்தால் அவரைப் பிரதமராக்கியதில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பது தெரியவரும். உள்ளபடியே அதிகாரப் பகிர்வில் பிரச்சினைகள் நீடித்ததன் காரணமாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் பயஸ் ஹமீத் காபூலுக்கு விரைந்தார்.

அவர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இடைக்கால அரசு உருவானதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை ஆப்கானின் மண்ணின் மைந்தர்கள் விரும்பவில்லை. தலிபான்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து காபூலில் இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணீர் புகைக் குண்டு போட்டு தலிபான்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். இவற்றையெல்லாம் பத்திரிகையாளர்கள் பதிவுசெய்து ஊடகங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் அந்தப் பத்திரிகையாளர்களைப் பிடித்து தலிபான்கள் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

எடிலாட் ராஸ் என்ற பத்திரிகையைச் சேர்ந்த நிமத் நக்தி (28), தகி (22) ஆகிய இரு பத்திரிகையாளர்களும் தலிபான்கள் கைதுசெய்து கொடூரமாக தாக்கியுள்ளனர். தலிபான்களால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கோரமான புகைப்படங்கள் வெளியாகி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்திருந்த நிலையில், இவ்வாறு செயல்பட்டிருப்பது அவர்கள் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.
Painful. Afghan journalists from @Etilaatroz, Nemat Naqdi & Taqi Daryabi, display wounds sustained from Taliban torture & beating while in custody after they were arrested for reporting on a women’s rally in #Kabul, #Afghanistan.#JournalismIsNotACrime https://t.co/jt631nRB69 pic.twitter.com/CcIuCy6GVw
— Marcus Yam 文火 (@yamphoto) September 8, 2021