‘தாலிபான்களின் தாராள மனசு’ - ஆஸி. செல்லும் ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தாலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஏராளமான மக்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அதேசமயம் உலக நாடுகள் அனைத்துடனும் நட்புறவு பாராட்ட விரும்புவதாகவும், ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழலாம் என்றும் தாலிபான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது தாலிபான் அமைப்பினர் விளையாட்டுகள் உட்பட பெரும்பாலான பொழுதுபோக்கு அம்சங்களை தடை செய்தனர்.
விளையாட்டு மைதானங்களை, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் இடமாக பயன்படுத்தினர். இதனிடையே தற்போது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2021 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாத்தில் நடக்கவுள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளது.