பெண்களுக்கு இப்படி பண்ணக்கூடாது - தாலிபான்களின் அடுத்த அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி

afghanistan taliban
By Petchi Avudaiappan Nov 22, 2021 09:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தாலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, அங்கு பொதுமக்கள் மீது அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தாலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு ய்ஜாலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் நடிக்க தடைவிதித்து தாலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகையான ஆடை அணிய வேண்டும் என்கிற விவரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதைத்தவிர ஷரியா சட்டங்கள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மதிப்புகளுக்கு எதிராக கருதப்படும் படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதத்தை கொச்சைப்படுத்தும், ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜதுல்லா முஜாதிதி கூறுகையில், "இதுப்போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை. தலிபான்களின் புதிய விதிமுறைகளில் சில விதிகள் நடைமுறையில் இல்லை. சிலவற்றை எதார்த்தத்தில் பின்பற்ற முடியாது. இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொலைக்காட்சிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம்" என்று அவர் கூறினார்.