தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி உலக சாதனை படைத்த இந்திய பெண்!

woman sea dhanushkodi talaimannar
By Jon Mar 21, 2021 02:32 PM GMT
Report

தெலுங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி (48) என்கிற பெண் இலங்கை தலைமன்னார் முதல் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை பாக் நீரிணை பகுதியில் கடலை நீந்திக் கடந்து முதல் இந்திய பெண்மணி சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டையும், இலங்கையையும் பாக் நீரிணை கடற்பகுதி பிரிக்கின்றது.

ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள ராமர் பாலம் என அழைக்கப்படும் மணல் திட்டுக்களும் பாக் நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கின்றன. இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் நீரில் பாறைகள், ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் மற்றும் பிற ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பாக் நீரிணை கடலை இடைவிடாமல் நீந்தி கடந்து சாதாரண செயல் கிடையாது.

30 கி.மீ. நீளம் உள்ள இந்தக் கடற்பகுதியை சியாமளா கோலி கடந்து சாதனை படைத்திருக்கிறார். இந்தக் கடலை நீந்திக் கடந்த முதல் இந்திய பெண்மணி, உலகின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை இதன் மூலம் சியாமளா பெற்றிருக்கிறார். ஏற்கெனவே பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சியாமளா கோலி தெலுங்கானவில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேந்தவர். சமூகவியல் மற்றும் இணைய தள வடிவமைப்பு மற்றும் மல்டிமீடியா பட்டம் பெற்றிருக்கிறார்.

இவர் 'ஜி.எஸ் டிஜிட்டல் ட்ரீம் டிசைனர் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி சொந்தமாக தொழில் நடத்துகிறார். அனிமேஷனில் ஆர்வம் கொண்ட சியாமளா கோலி 'பரமநந்தாயா ஷிஷியுலு' என்ற நகைச்சுவை அனிமேஷன் சீரியலை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த சீரியல் ஐதராபாத்தில் உள்ள தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவர் 'GOWRI' கதையை எழுதி 2டி அனிமேஷனில் இயக்கி வருகிறார். இந்த படம் குழந்தைகளுக்கான கருத்துகளையும், நகைச்சுவையையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது சியாமளா கோலி குழு ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் 2டி அனிமேஷன் அம்ச திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு இலங்கை தலைமன்னார் கடற்கரையிலிருந்து சியாமாளாவின் நீச்சல் பயணத்தை இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வேலுபிள்ளை காண்டையா சிவக்னனம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை பாதுகாப்புடன், நீச்சல் பயிற்சியாளர்களின் உதவியுடன் சியாமளா 13 மணி நேரம் 43 நிமிடங்கள் இடைவிடாமல் கடலில் நீந்தி ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு மாலை 5 மணி 50க்கு வந்தடைந்தார். இதன் மூலம் பாக் நீரிணையை நீந்தி கடந்த 13-வது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் தற்போது பெற்றுள்ளார்.

இடைவிடாமல் நீந்தி வந்த சியாமளாவை ராமேஸ்வரம் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது - 'ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு. கடந்த ஆண்டே பாக் நீரிணை கடலை நீந்திக் கடப்பதற்கு இந்திய - இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போயிற்று. "பாக் நீரிணையை ஒரு பெண்ணாக நான் நீந்தி கடந்தது, பெண்களால் அனைத்து உயர்ந்த இலக்குகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி உலக சாதனை படைத்த இந்திய பெண்! | Talaimannar Woman World Swimming Dhanushkodi Sea

சாதனை படைத்தவர்கள் 1954ம் ஆண்டு பாக் நீரிணை கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 27 மணி 8 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். அவரை தொடர்ந்து 1966-ல் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் 29 மணி 25 நிமிடங்களில் இந்த கடலைக் கடந்தார்.

1994ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குற்றாலீஸ்வரன் தனது 13 வது வயதில் 16 மணி நேரத்தில் பாக் நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார். 2019-ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக் நீரிணையைக் நீந்திக் கடந்தார்.

அதுபோல், கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவை சேர்ந்த எடி ஹூ என்பவர் முதல் பெண்ணாக பாக் நீரிணை கடற்பகுதியை நீந்திக் கடந்தார்.