உடும்பை கொல்பவருக்கு ரூ.1,300 பரிசு - 1 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்
1.2 லட்சம் உடும்புகளை கொல்ல தைவான் அரசு திட்டமிட்டுள்ளது.
தைவான்
தைவான், கிழக்கு ஆசியாவில் சீனாவின் அருகே உள்ள நாடாகும். இந்த நாடு பெருமளவு விவசாயத்தை நம்பி உள்ள நாடாகும்.
இங்கு உடும்புகளை இயற்கையாகவே வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் உயிரினங்கள் இல்லாததால் உடும்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உடும்பு
இந்த உடும்புகள் அங்குள்ள நகர் பகுதிக்குள் புகுந்ததோடு இல்லாமல், விவசாய நிலங்களுக்குள் சென்று பழங்கள், இலைகள் என அனைத்தையும் காலி செய்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டே தைவான் அரசு, 70,000 உடும்புகளை கொன்றது.
தற்போது இந்த ஆண்டும் 1.2 லட்சம் உடும்புகளை கொல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக வேட்டைக்காரர்களுக்கு ஒவ்வொரு உடும்பை கொல்வதற்கும் 15 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,300) பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியனை பூர்வீகமாகக் கொண்ட இந்த பச்சை நிற உடும்புகள் 2 அடி நீளம் முதல் 6.6 அடி நீளம் வரை வளரக்கூடியவை, 20 ஆண்டுகள் வரை வாழும். பெண் உடும்புகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும். கூர்மையான நகம் மற்றும் பற்கள் இருந்தாலும் உயிரினங்களை தாக்குவதில்லை.