கேப்டன் ஜோ ரூட்டுக்கே இனி இடமில்லை- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு
உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.
கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.இதற்கான அனைத்து நாடுகளும் தங்கள் அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து அணி கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில் இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயான் மோர்கன் தலைமையிலான அந்த அணியில் மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகிய வீரர்களும், ரிசர்வ் வீரர்களாக டாம் கரண், லியாம் டாவ்சன், ஜேம்ஸ் விண்ஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 3 சதங்களை விளாசி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இதேபோல் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பவுலர் ஆர்ச்சர் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.