தீபாவளி சரவெடி: இந்திய அணி இமாலய வெற்றி

T20WorldCup INDvAFG
By Irumporai Nov 03, 2021 09:49 PM GMT
Report

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி முன்னேற்றத்தை கண்டுள்ளது.

டி20 உலக கோப்பையில் இன்று அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், அஷ்வின் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

ரோகித் சர்மா 47 பந்தில் 74 ரன்களும், கே.எல். ராகுல் 48 பந்தில் 69 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த ரிஷாப் பண்ட் 13 பந்தில் 27 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 13 பந்தில் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஷேசாத் ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜஸாய் 15 பந்தில் 13 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார். 3-வது வீரராக களம் இறங்கிய ரஹ்மதுல்லா குர்பாஸ் 10 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். குல்பதின் நைப் (18), நஜிபுல்லா ஜர்தான் (11) ஆகியோரை அஷ்வின் வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே அடித்தது.  இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் அடிக்க இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.