டி20 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
டி20 உலக கோப்பை கிரிக்கெட்
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குரூப்1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர். எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது .