பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாயில் நடக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 24ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
பாகிஸ்தான் அணியின் வெற்றியை வெடி வைத்து கொண்டாடியதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ மாணவர்கள் மீது 'உபா' எனப்படும், 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்' கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தானைப் புகழ்ந்தும், வீரர்களைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர்.
இது தொடர்பாக வீடியோவும் வைரலானது. மேலும் அந்த மாணவர்கள் தங்களின் சமூக ஊடகக் கணக்கிலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் பாகிஸ்தான் வீரர்களைப் புகழந்திருந்தனர்.
இதையடுத்து அந்த 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 7 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கொண்டாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சசர் யோகி ஆதித்யநாத், ''இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு பாயும்'' என எச்சரித்துள்ளார். இதற்கு அரசியல் விமர்சகர்களும்,சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.