டி20 கோப்பையை வெல்லப்போவது யார்? - ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா நியூசிலாந்து
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் சூப்பர்-12 சுற்றுடன் வெளியேற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.
அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து இடையேயான ஆட்டத்தில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்றிரவு மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது.
நியூசிலாந்து இறுதி சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதனால் யார் கோப்பையை வென்றாலும் அவர்களுக்கு இது முதலாவது டி20 உலகக்கோப்பையாக இருக்கும். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கையில் ஏற்பட்ட காயத்தால் விக்கெட் கீப்பர் டிவான் கான்வே விலகியது பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்து இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. அதற்கு இன்று பதிலடி கொடுக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலகக்கோப்பை இன்னும் கிட்டவில்லை என்பதால் இன்றைக்கு யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.