2024 டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி கேப்டன்..? தமிழக வீரர் பரபரப்பு தகவல்!
2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு தோனியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தமிழக முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான நானி பேசியுள்ளார்.
எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. 2007ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை, 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
இதனால் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த ஒரே இந்திய கேப்டனாக எம்எஸ் தோனி உள்ளார். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எந்த இந்திய கேப்டனும் ஒரு ஐசிசி கோப்பையையும் வென்று கொடுக்கவில்லை. தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பையில் கூட ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.
கேப்டனாக தோனி..?
இந்நிலையில், 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு தோனியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தமிழக முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான நானி பேசியுள்ளார். அவர் கூறியதாவது "தோனி தற்போது ஐபிஎலில் மட்டுமே விளையாடி வருகிறார். அதுவும் விக்கெட் கீப்பராக, பினிஷராக சிறப்பாக செயல்படுகிறார்.
சொதப்பும் வீரரை கூட பார்முக்கு கொண்டு வந்துவிடுகிறார். கடந்த சீசனில் கோப்பையையும் வென்றுகொடுத்திருக்கிறார். ஆகையால், அடுத்த வருடம் ஜூனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தோனியை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது? அவரை கேப்டனாக நியமித்தால், நிச்சயம் கோப்பையை வெல்லலாம். அவர் வரவேண்டும். அவர் வருவார், இதுதான் எனது கணிப்பு'' என நானி தெரிவித்துள்ளார்.