டி20 உலகக்கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளியேற்றிய அயர்லாந்து
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைய்ல் மேயர் 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் எவின் லிவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் இறுதி வரை அவுட்டாகாமல் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். ஓடின் ஸ்மித்தும் அவுட்டாகாமல் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 17.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 45 ரன்களும் குவித்தனர்.இதனால் அயர்லாந்து அணி விக்கெட் 9 வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை உலககோப்பையிலிருந்து வெளியேற்றியது. குரூப் Bயில் அயர்லாந்து அணி சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளது.