ஒரு அணி நன்றாக இருக்க முதலில் பேட்ஸ்மேன்களை பந்து வீச தயார் செய்ய வேண்டும்... - அனில் கும்பிளே கருத்து

Cricket T20 World Cup 2022
By Nandhini Nov 12, 2022 07:31 AM GMT
Report

ஒரு அணி நன்றாக இருக்க வேண்டுமென்றால் முதலில் பேட்ஸ்மேன்களை பந்து வீச தயார் செய்ய வேண்டும் என்று அனில் கும்பிளே கருத்து தெரிவித்துள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

t20-world-cup-2022-cricket-india-team-anil-kumble

அனில் கும்பிளே கருத்து

இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளருமான அனில் கும்பிளே கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு அணி சமநிலை நன்றாக இருக்க வேண்டுமானால் முதலில் பேட்ஸ்மேன்களும் பந்து வீச வேண்டியது அவசியம். இந்திய 'ஏ' அணியில் கூட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவது இல்லை. முதலில் பேட்ஸ்மேன்களை பந்து வீச தயார் செய்ய வேண்டும்.

அணிக்கு ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து விளையாட வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் ஆடுவது இந்திய வீரர்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது.

நமது இளம் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால் அவர்கள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள். திறமையை வெளிக்கொண்டு வர உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.