வீரர்களின் ஆட்டத்தை விமர்சிங்க.. சும்மா... ஐபிஎல் மேல் பழி போடாதீங்க... - கவுதம் கம்பீர் ஆவேசம்..
வீரர்களின் ஆட்டத்தை விமர்சிங்க. அதைவிட்டு சும்மா... ஐபிஎல் மேல் பழி போடாதீங்க என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
ஐபிஎல் தான் காரணம்
இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறாததற்கு ஐபிஎல் தான் காரணம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் பேசுகையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதே கிடையாது.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன் 2007ல் இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் 2008ல் தொடங்கிய பிறகு இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வென்றதே கிடையாது. 2011ம் ஆண்டு மட்டும் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிதான் என்றார்.
கவுதம் கம்பீர் ஆவேசம்
டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட கவுதம் கம்பீர் கூறுகையில்,
இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கின்றார்கள். ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிட்டு, ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது.
ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை எங்கோ இருக்கும். பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம் என்றார்.